சனி, 19 ஆகஸ்ட், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 9

இன்று மாலை நான் கோடம்பாக்கத்திலிருந்து தரமணிக்குப் பேருந்தில் ஏறுவதற்குக் காத்திருந்த சமயத்தில்தான் இன்று உலகப் புகைப்பட தினம் என்று அறிய நேர்ந்தது. வீட்டுக்குச் சென்று இன்று புகைப்படங்களைப் பகிரலாம் என்று நினைத்த சமயம், அழகான படங்கள் பகிரும் வெங்கட்ஜி, தோழி கீதாமதிவாணன், அனு, கோமதியக்கா, எங்கள்ப்ளாக் எல்லோரும் நினைவுக்கு வர, வெங்கட்ஜியின் பதிவு ஏன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டே அலைபேசியில் மெயில் பார்த்தால் வெங்கட்ஜியின் புகைப்படப் பதிவு! மிக மிக அழகான படங்கள். வெங்கட்ஜி மற்றும் தோழி கீதாமதிவாணன் அவர்களின் படங்கள் போல் இருக்காது என்றாலும் எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் இன்றைய தினத்தில் இங்குப் பகிர்கின்றேன்.  


இந்த இரு படங்களும் என்ன படங்கள் என்று சொல்ல முடிகிறதா ஊகித்துப் பாருங்களேன். பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!


நடைப்பயிற்சி செல்லும் போது என் செல்லம் கண்ணழகியைப் பார்த்துக் குரைக்கத் தயராக இருக்கும் செல்லம்


மரத்தின் அடியில்தான் வேர் இருக்கும்...இங்கு பாருங்கள் மரத்தின் நடுவில் கோயிலின் கூரையில் வேர் விட்டு மரமாகப் பார்க்கவே வியப்பாக இருந்ததால் உடனே க்ளிக்கினேன்!
இவ்விரண்டு படங்களிலும் இருக்கும் பூச்சியும் ஒன்றே! முதலில் உள்ள படம் தானாகவே  ஃப்ளாஷ் இயங்கி எடுத்தது. இரண்டாவது படம் நான் ஃப்ளாஷ் பட்டனை எழும்பவிடாமல் அழுத்திக் கொண்டு ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்த படம். 

எருக்கம்பூவில் வண்டு


  
இந்தக் காளானைப் பாருங்கள்! அடுக்கடுக்காகப் பூ போன்று!! என் மாமியார் வீட்டுத் தோட்டத்தில்..வித்தியாசமான உருண்டை வடிவில் பூ தானே இது? இல்லை காயா?  முதன்முறையாகப் பார்க்கிறேன். ! தொட்டுப்பார்க்க முடியவில்லை. மரத்தில் உயரத்தில் இருந்தது.  ஜூம் பண்ணி எடுத்தேன். இது என்ன என்று அறிந்தவர்கள் சொல்லலாம்!
தாமதமாகிவிட்டதால், எல்லாவற்றிற்கும் வழக்கம் போல் கருத்துகள் எழுத நேரம் இல்லை....

------கீதா

புதன், 9 ஆகஸ்ட், 2017

அவள் ஒரு சாகஸ நாயகி!

அவளுக்கு, அவளை ரசித்து, ரஸனையான மெஸேஜுகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். வாட்ஸப்போ? இருக்கலாம். அவளுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாம். என்னிடம் சொன்னாள். அவள் ஃபோட்டோ கூட எங்கும் வந்ததில்லையே என்று எனக்குத் தோன்றியது.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும், மலர்களும் பேசினால்


அந்நியன் மரம்!!!???.... மூட மாந்தர்களே! எங்களையா வெட்டி வீழ்த்துகிறீர்கள்! உங்களுக்குக் கும்பிபோஜன, அக்னிக்குண்டத் தண்டனைகள் கிடைப்பதாக! ஹஹஹ!

மலர்ந்துவிட்டேன் நான்!
காத்திருக்கிறேன் 
என் தேனினைப் பருக வரும்
என் காதலன் வண்டிற்காக!
சூரியன் வந்துவிட்டான்!
காதலனே! எங்கே சென்றாய்?
என் தேனும் வற்றுகிறதே! 
 
காத்திருந்துக் காத்திருந்து 
பொழுதே சாய்ந்திட்டது
என் காதலனைக் காணாது
என் மகரந்தமும் சோர்ந்துவிட்டது!
 
நாங்கள் இயற்கையில் அமைந்த பௌ (Bow) பட்டன்கள்! எவ்வளவு அழகாய் இருக்கிறோம் இல்லையா!!
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறோம்
வாழ்வதே ஒரு நாள்!
இடையில் எங்களை 
ஏன் கொய்து பிய்த்துக் குதறுகிறீர்கள்!
நீங்கள் கட்டடங்களாகக் கட்டிக் கொண்டே போனால் நாங்கள் வளர்ந்து மலர்வதற்கு இடமே இல்லாமல் போகுமே! நீங்கள் வாழ்வதற்கு நாங்களும் மிகவும் முக்கியம் மக்களே! 
நாங்கள் மலர்வதே 
உங்களை மகிழ்விக்கத்தான்! 
உங்கள் மரணத்தில் நாங்கள் மிதிபட்டு 
மரணமடைகிறோம்!
உங்கள் திருமணத்திலும் நாங்கள் மிதிபட்டு
மரணமடைகிறோம்! 
முரண்!
 
பூப்போன்ற பூவையர் 
என்று  உவமையுடன் 
சொல்லும்  நீங்கள்
பூவாகிய எங்களைப் பிய்த்து மிதிப்பதேனோ?
பூப்போன்ற பூவையரை
 மிதித்துத் துன்புறுத்தாதீர்
என்று குரல் கொடுக்கும் நீங்கள்
இளம் பூவையர் எங்களையும்
காப்பதற்குக் குரல் கொடுங்களேன்!
பூப்போன்ற மனம்
என்று சொல்லிவிட்டு
வேதனையுறும் வார்த்தைகளை
உதிர்க்கலாமோ?
எங்களயும்தான்!
நாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்!

நாங்கள் வீழ நினைப்பதும் நாங்கள் பிறந்த நிலத்தில் தான் குப்பைத் தொட்டியிலல்ல…வீழ்ந்தாலும் உரமாவோம்!

உங்கள் வீடு வண்மா வேண்டுமா?! எங்களைத்தான் நாடுவார்கள் வண்ணத்துப் பூச்சிகள்! நீங்கள் அலங்காரமாக வைக்கும் ப்ளாஸ்டிக் பூக்களை அல்ல! எங்களைப் போற்றுங்கள்! உங்கள் வீட்டினை நாங்கள் அலங்கரிக்கிறோம்! 
வண்ணத்துப் பூச்சிகளுடன், புள்ளினங்களுடன்!

 நாங்கள் மிகவும் பொறுமைசாலிகள்! சரிதானே!!?

எங்களை உற்று நோக்குங்கள்! உங்களை அறியாமலேயே நாங்கள் உங்கள் முகத்தில் மலர்வோம்! புன்சிரிப்பாய்!!! புன்சிரிப்பு மன அழுத்தத்தை மாற்றிவிடும் தெரியுமா!!!

நான் பாடும் மௌன ராகம் கேட்கிறதா!!

யப்பா! என்ன வெயில்! நீங்களெல்லாம் வெயிலுக்கு ஒதுங்கிடறீங்க! எங்களையும் கொஞ்சம் நிழல்ல வையுங்கப்பா! கருத்துப் போயிடுவோம்ல!  

இயற்கை அன்னை மௌனமாக இசைத்திடும் இசையாய் நாங்கள்!

இயற்கை அன்னை எங்கள் வழியாய் புன்சிரிப்பை உதிர்க்கிறாள்! உங்களுக்கும் அது பரவட்டும்! 
நாங்கள் ஒவ்வொருவரும் மலர்கிறோம்! அருகருகே இருக்கும் எங்களுக்குள் போட்டியில்லை…பொறாமையில்லை! 

 எங்கள் இதழ்களைப் பிரிக்காமல் அழகை ரசியுங்கள்!
வண்ண வண்ண இலைகள் வடிவில் பூக்களாய்
நாங்களும் அழகுதான் இல்லையா!

எனக்குக் கவிதை எழுதத் தெரியாது! எனவே பூக்கள் பேசுவது போல என் மனதில் தோன்றிய எண்ணங்களே இங்கு! ஆயின், அருமையாகக் கவிதை எழுதுபவர்களும் நம் வலை உறவுகளில் இருக்கிறார்கள். பெண் பூக்கள் - நம் தோழி/சகோதரி தேனம்மை அவர்கள் எழுதிய இப்புத்தகத்தில் பூக்களின் உணர்வுகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். புத்தக விமர்சனத்தை இங்கு 1, (எங்கள் ப்ளாக்) 2. (வை கோ சார் ப்ளாக்) காணலாம். 
வித விதமான பூக்களை மிக மிக அழகாக, மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்படி மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் படம் பிடித்துத் தனது தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கீதா மதிவாணன் அவர்கள் தற்போது பூக்களைப் பற்றி விவரமான தகவல்களுடன் எழுதத் தொடங்கியுள்ளார். 

-----கீதா